Sunday, April 18, 2010

தமிழகத்தின் தத்துப்பிள்ளை


தினமும் உங்களை பார்க்கின்றேன். நீங்கள் தான் வெவ்வேறு உருவங்களில். வெவ்வேறு உடைகளில். பலவிதமாக என்னை கடந்து சென்றுவிடுகிறீர்கள். உங்கள் பார்வைகள் என்னை தனிமைப்படுத்தி கொன்று தெருக்கலில் ஓடும் சாக்கடைக்குள் புதைந்து விடுகின்றது. இந்த தமிழகம் என்னை தத்துப்பிள்ளையாய் கூட பாவிக்க மாட்டேன் என்கிறது.  ஆம், நான் தத்து பிள்ளை தான். யார் என்னை தத்தெடுத்தார்கள் ?. தெரியவில்லை, இல்லை நானாகவே தத்து கொடுக்கப்பட்டேனா?. அதுவும் தெரியவில்லை.

அப்படியானால்,  தெரியாத விவரங்கள் மக்கிப்போய் விடுமா?. ஆகி விட்டால் தான் என்ன? என்ன பயன்? யாருக்கு பயன்?. ஒரு நாள் நீங்களும் மக்கித்தானே போவீர்கள். ஆனால் தற்பொழுது,  உங்களுக்கு வேண்டுமென்றால் பயன் இருக்கலாம், ஏனெனில் நீங்கள் இந்த சமூகத்து மனிதர்கள். நலினத்தன்மை உடையவர்கள். வலைந்து கொடுப்பீர்கள். நான் யாருக்கு தத்து கொடுக்கப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது. கண்டிப்பாக உள்ளது. உங்களது நலினம், நீங்கள் தத்துப்பிள்ளையா இல்லையா என்பதை உணர்த்திவிடுகிறது.

அய்யோ, எங்கு பார்த்தாலும் நலினம். ஊர் முழுவதும் வலைந்திருக்கின்றது. தெருக்கள் கூட தெருக்களாக இல்லை. ஆம், இது தான் என் வசிப்பிடம். என் வசிப்பிடத்திற்கு வராதீர்கள், நிங்கள் வந்து விட்டால் நான் எங்கு உறங்குவேன்.  தினம் தினம் என்னுடைய காயங்களை எப்படி தனிமைப்படுத்துவேன். ஓடுகிறேன். ஓடிவிட்டேன். காற்று மட்டும் தப்பித்துவிட்டான் போல. என் மூச்சுக்காற்று அகப்பட்டுக் கொண்டான். தப்பிக்க தெரியவில்லை. பயிற்சியும் இல்லை. 

அங்கே, நான் நிற்கின்றேன். ஆம், தூரத்தில் இருந்து பார்த்தால் நான். கிட்ட நெருங்கிவிட்டேன்.  பல வண்ணங்களில் உடைகள், உடல் உறுப்புகளில் ஒட்டிக்கொண்டு மினுமினுக்கும் வெள்ளையன் பொருட்கள், புன்னகையுடன் உங்கள் எதிர்பால், எனக்கும் தான், ஆனால் ஆன்மையற்றவனாய் நெருங்குகிறேன், வானுயர்ந்த கட்டிடங்கள். நான் நீங்களாகி விட்டீர்கள்.உங்களது அடியாட்களாக அனைத்தும் என்னை விரட்டுகின்றது.தொலைந்துவிட்டேன். எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. உங்களையும்  விரட்டும். கண்டிப்பாக விரட்டும்.உறக்கம் தொலைந்த வாழ்க்கை. வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் உங்களிடம்.

ஏமாற்றுக்காரர்கள் நீங்கள். ஏமாறுபவர்களும் நீங்கள் தான். அவர்கள் வேறு, நீங்கள் வேறு கிடையாது. நீங்கள் தான் அவர்கள். அவர்கள் தான் நீங்கள். என்னை அனுமதிக்காத நீங்கள் தான் இந்த சமுதாயம். 

உலகமயமாக்கலால் சீர்குலைந்து போன நீங்களா என்னை தத்தெடுக்கப் போகிறீர்கள்?. மடிந்து போன கலாச்சாரத்திற்கு கூட அஞ்சலி செலுத்திவிடலாம். மக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு புரியவில்லையா?.ஒடுவதை நிறுத்துங்கள். பொருள் ஈட்டி புதைக்குழிக்குள் விழுந்துவிட்டீர்கள்.அதை உணர எத்தனை சாக்கடைக்குள் புதைய வேண்டுமோ?.

புரிந்துவிட்டது.  நான் ஓடுவதை நிறுத்தி விட்டேன். உங்களையும் நிறுத்துவேனா?.உங்களை தான் தத்தெடுக்க வேண்டும். நீங்கள் எல்லாம் நானாக .....

மரணித்த சோழன்

No comments:

Post a Comment